பதிவு செய்த நாள்
18
செப்
2015
12:09
சென்னை: புதிதாக, 206 கோவில்களில், அன்னதான திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம், 2002ம் ஆண்டு, மார்ச் 23ல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், முதல்வர் ஜெயலலிதாவால், துவக்கி வைக்கப்பட்டது.இப்போது, 518 கோவில்களில், அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு நாளைக்கு, 47 ஆயிரத்து 809 பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.இந்த திட்டம் மேலும், 206 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். அதன்படி மேலும், 206 கோவில்களில், அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். இதன்மூலம் கோவிலுக்கு, 50 பேர் வீதம் தினமும், 10 ஆயிரத்து 300 பக்தர்கள், கூடுதலாக பயன்பெறுவர்.அதேபோல், அன்னதான திட்ட தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள், 820 பேரை, பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதிய ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, இரண்டு பணியாளர்களுக்கு, ஜெயலலிதா, பணி ஆணை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காமராஜ், சண்முகநாதன், வீரமணி, தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.