திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஒரே கல்லில் சண்டிகேஸ்வரர் சன்னதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 10:09
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 4 டன்னுள்ள ஒரே கல்லில் சண்டிகேஸ்வரர் சன்னதி அமைகிறது. பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோயில் சிதிலமடைந்ததால் முழுவதும் இடிக்கப்பட்டு 2013 ஜூனில் திருப்பணிகள் துவங்கின. இக்கோயில் ரூ.20 கோடியில் 800 ஆண்டுகால பழமையில் அமைகிறது. இதற்காக நெல்லை கருங்குளம், கன்னியாகுமரி மயிலாடியில் இருந்து 11 ஆயிரம் டன் கற்கள் கொண்டு வரப்பட்டு கோயில் சிற்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்பணியில் 80 ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலில் ஞானாம்பிகை, காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வர், அபிராமி அம்மன் ஆகிய 4 மகா சன்னதிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் முழுக்கால் வேலைப்பாட்டில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வர் சன்னதிகளுக்கு இடையே சண்டிகேஸ்வரர் சன்னதி அமைக்கப்பட உள்ளது. இதற்காக 4 டன்னுள்ள ஒரே கல்லில் சன்னதி அமைக்கும் பணியில் ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி 4 மாதங்களாக நடக்கிறது. இந்த சன்னதி தலா 3 அடியில் உயரம், அகலம், 2.5 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. ஸ்தபதி பாஸ்கரன் கூறியதாவது: சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின், கடைசியாக சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்வர். அப்போது சிவன் கோயிலில் இருந்து எந்த பொருளையும் எடுத்து செல்லவில்லை என்பதை குறிக்க வெறுங்கையை தட்டிவிட்டு செல்வர். இந்த சண்டிகேஸ்வரருக்கு எந்த சிவ ஆலயத்திலும் ஒரே கல்லில் சன்னதி இல்லை. சன்னதியின் உபபீடம் (கீழ் பகுதி) முதல் பிரஸ்தரம் ( மேல் பகுதி) வரை ஒரே கல்லில் அமைவது இதுவே முதல் முறை, என்றார்.