திண்டுக்கல்: "பழநி கோயிலில் பக்தர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என, கலெக்டர் ஹரிஹரன் கேட்டுக் கொண்டார். பழநி கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., நாகேந்திரன், தமிழ்நாடு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பேசியதாவது: பழநி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பாதுகாப்புக்காக கோயில் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும். பக்தர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்த கூடாது. துணி பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்றார். ஆர்.டி.ஓ.,க்கள் மனோகரன், கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன் பங்கேற்றனர்.