பதிவு செய்த நாள்
25
செப்
2015
12:09
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, நேற்று சிறப்பு தொழுகை நடந்தது; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், பெரிய கடை வீதி, பெரிய தோட்டம், மரக்கடை வீதி, டூம்லைட் மைதானம் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், நேற்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். "ஈத் முபாரக் என்று கூறி, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, பக்ரீத் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அவிநாசி: தேவராயன்பாளையத்தில் உள்ள குபா பள்ளிவாசலில், நேற்று காலை இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையின் சிறப்பு குறித்து, குபா பள்ளிவாசல் இமாம் ஜாபர் சாதிக் சிறப்புரை ஆற்றினார். பின், ஊர்வலம் புறப்பட்டு, கபர்ஸ்தானில் நிறைவுற்றது. அங்கு, முன்னோர்களிடம் ஆசி பெற்ற இஸ்லாமியர், பக்ரீத் விருந்து சமைத்து, உண்டு மகிழ்ந்தனர்.
அவிநாசி - மங்கலம் ரோட்டில் உள்ள பள்ளிவாசல், சேவூர் பள்ளி வாசல் ஆகியவற்றிலும், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏழைகளுக்கு, "குர்பானி வழங்கப்பட்டது. அவிநாசி, சேவூர் பகுதியை சேர்ந்த பலர் பங்கேற்றனர். அனைவரும் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் விருந்து சாப்பிட்டு, பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பல்லடம்: பல்லடம் - மங்கலம் ரோட்டில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், ஈத் மைதானத்தில், 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பல்லடம் காமராஜர் நகரில் காஜில் இஸ்மாயில் பள்ளிவாசல், அறிவொளி நகர் தவ்ஹித் ஜமாத், அண்ணா நகர் பள்ளிவாசல் மற்றும் சின்னக்கரை தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.