பதிவு செய்த நாள்
14
அக்
2015
11:10
மதுரை: நவராத்திரி மூன்றாம் நாளில், மதுரை மீனாட்சி வேதத்திற்குப் பொருள் உரைத்த அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
கண்வ மகரிஷியும், கர்க்க மகரிஷியும் வேதத்தின் உட்பொருள் விளங்காமல் சிரமப்பட்டனர். அரபத்த முனிவர் என்பவரிடம், சிரமம் தீர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டினர். அரபத்தர் அவர்களிடம், “புண்ணியத் தலமான மதுரை சென்று, அங்கு வீற்றிருக்கும் சொக்கநாத பெருமானை வேண்டினால், வேதத்தின் பொருள் விளங்கும்,” என்று ஆலோசனை கூறினார். அதன்படி, மதுரை வந்த மகரிஷிகள் கார்த்திகைபவுர்ணமி தொடங்கி ஓராண்டு தொடர்ந்து சொக்கநாதரை வழிபட்டனர். அவர்களின் பக்தி கண்டு இரங்கிய சொக்கநாதர், குருநாதராக நேரில் தோன்றி நான்கு வேதங்களின் உட்பொருளையும் விளக்கியதோடு, வேதமும், சிவமும் ஒன்றேஎன்பதையும் உணர்த்தினார். வேதத்திற்கு பொருள் உரைத்த கோலத்தில், மீனாட்சியை தரிசித்தால் கல்வி வளம் பெருகும். தெளிந்த புத்தி உண்டாகும்.
நைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி(தட்டாம் பயறு) சுண்டல்
பாடல்: அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக் குறவாய மனிதரையே.