பதிவு செய்த நாள்
20
அக்
2015
10:10
செஞ்சி: இஞ்சிமேடு கல்யாண வரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், கல்யாண வரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜையும், பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், ராமர், சீதா, லட்சுமணர் மற்றும் கல்யாண வரத அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனமும், வெள்ளி காப்பு அலங்காரமும் செய்தனர். கல்யாண வரத அனுமனுக்கு வடை மாலை சாற்றினர். காலை 9:00 மணிக்கு இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்ட சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும் நரசிம்ம, மகாலட்சுமி, தன்வந்திரி, கருட பூஜையும், ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்கப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு கல்யாண வரத அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.