பதிவு செய்த நாள்
23
அக்
2015
10:10
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசூர வதம் நடந்தது. கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவிற்கு அடுத்து இக்கோயில் விழா பிரசித்தி பெற்றது.அம்மை நோய் கண்டவர்கள் முத்தாரம்மனை வழிபட்டால் குணம் பெறுவர் என்பது நம்பிக்கை. குணமடைந்தவர்கள் மாறு வேடத்தில் கோயிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்வர். நினைத்தது நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் இந்த வேண்டுதல் மேற்கொள்வர். வேண்டுதல் நிறைவேற்றுவோர், கோயில் கொடியேற்றத்தில் இருந்து, வீட்டிற்கு வெளியே ஓலைக்கூரை அமைத்து அதில் விரதம் இருப்பர். தசரா குழுக்கள்: இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் தசரா செட்கள் (குழுக்கள்) அமைத்துக்கொள்வர். இதில் 10 முதல் அதிகபட்சமாக 40 பேர் வரை இருப்பர்.
இவர்கள் காளி, மாரி, ஆஞ்சநேயர், பெண், போலீஸ் என வேடங்களில் ஊர்ஊராக சென்று காணிக்கை வசூலிப்பர். பின், கோயிலுக்கு செல்வர். கோலாகலம்: நேற்று முன்தினம் முதல் ஏராளமான பக்தர்கள் மாறு வேடத்தில் குவிந்தனர். நேற்று, அம்மனை வணங்கி காணிக்கை செலுத்திவிட்டு, கடற்கரையில் திரண்டனர். மகிஷாசூர வதம்: பக்தர்கள் முன்னிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. அம்மன் சிம்ம வாகனத்தில், கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் இரவு 12 மணிக்கு எழுந்தருளினார். அங்கு மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நாளை மாலை அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.போலீஸ் குவிப்பு: திருவிழாவுக்காக போக்குவரத்து, திருச்செந்துாரில் இருந்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஊருக்கு வெளியே ௨ கி.மீ.,க்கு முன் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அஷ்வின் கோட்னீஸ் எஸ்.பி., தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.