பதிவு செய்த நாள்
23
அக்
2015
10:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் தேர் உற்சவம் நடந்தது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று முதல், 20ம் தேதி வரை, தினமும் காலையில் அபிஷேகம், திருமஞ்சனம்; மாலையில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, திருப்பாவை சாற்றுமறை; கேடய உற்சவம்; சுவாமி வீதியுலா; திருவாய்மொழி சாற்றுமறை என, நடைபெற்றது. நேற்று முன்தினம், ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம் நடந்தது. கோவிலில், வழக்கமான வழிபாடு முடிந்து, ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பூதத்தாழ்வார், காலை 7:15 மணிக்கு, அலங்கார திருத்தேரில் எழுந்தருளி, அவருக்கு, ஸ்தலசயன பெருமாள் மரியாதை அளித்தார்.அதை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, வீதியுலா புறப்பட்டார். பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என, முழக்கமிட்டு, மாடவீதிகளில் வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்ல, வீதிகளில், பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். வீதியுலா முடிந்து, பிற்பகல் 2:00 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. அதேநாளில், பொய்கையாழ்வார் திருநட்சத்திர நாளை முன்னிட்டு, மாலை 4:30 மணிக்கு, சுவாமி, தாயார், பொய்கையாழ்வார் ஆகியோருக்கு, அபிஷேக திருமஞ்சனம் நடந்தது. இரவு, சுவாமி வீதியுலா சென்றார்.நேற்று, காலை 8:00 மணிக்கு, பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம், அதைத்தொடர்ந்து, இரண்டாம் திருவந்தாதி சேவை, பூதத்தாழ்வார் உற்சவருக்கு திருமஞ்சனம், சுவாமி, தாயார், ஆண்டாள், நரசிம்மர் ஆகியோரிடம் மங்களாசாசனம் என, நடந்தது. சுவாமி, ஆழ்வாருக்கு, திரு கைத்தல சேவை செய்தார். ஆழ்வார், பொதுப்பணி துறை சாலை, ஆதிவராக பெருமாளை யும் தரிசித்தார்.