விருதுநகர்: விருதுநகரில் மகர நோன்பை முன்னிட்டு சிவபெருமானுக்கு வாலிபர்கள் புலி வேடமிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். மகர நோன்பை முன்னிட்டு சிவபெருமான், சந்திரசேகர் கோலத்தில் எழுந்தருளி, மக்களுக்கு கெடுதலை விளைவிக்கும் வன்னிய அசூரனை அம்பு எய்து கொன்றதாக ஐதீகம். இதற்கு மக்கள் புலி வேடமிட்டு நன்றி செலுத்துவதாக கூறப்படுகிறது. அம்புவிடுதல் நிகழ்ச்சி:நேற்று மகர நோன்பை முன்னிட்டு விருதுநகர் சொக்கநாதர் சுவாமி சந்திரசேகர் கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் நந்தவனத்தில் அம்பு விடுதல் நிகழ்ச்சி நடந்தது. அம்புகளை பிடித்தால் பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுவதால் பக்தர்கள் போட்டி போட்டு அம்பை பிடித்தனர். பின் மக்கள் வளமுடன் வாழ்வதற்காக பல்வேறு சமுதாய வாலிபர்கள் நேர்த்தி கடனுக்காக புலி வேடமிட்டு நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக நந்தவனம் வந்தடைந்தனர். மாலையில் ஒரு சமுதாய இளைஞர்களுக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.