பதிவு செய்த நாள்
23
அக்
2015
11:10
கோவை: விஜயதசமி விழாவையொட்டி, கோவையில் நடந்த கத்தி போடும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ரத்தம் சொட்ட, சொட்ட கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவையிலுள்ள குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள், நவராத்திரி விழாக்காலத்தின் முதல் நாளிலிருந்து, விரதம் இருக்க துவங்குகின்றனர். பத்தாம் நாளான விஜயதசமி திருநாளில், கத்தி போட்டு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். சாய்பாபா காலனி அழகேசன் ரோடு வினாயகர் கோவிலில் பூஜிக்கப்பட்ட கலசத்துடன் துவங்கிய பக்தர்கள் ஊர்வலம், ரங்கே கவுடர் வீதியிலுள்ள புதுசவுடம்மன் கோவிலை அடைந்தது. இதே போல், பூமார்க்கெட் செல்வ வினாயகர் கோவிலில் துவங்கிய பக்தர்கள் ஊர்வலம், பழைய சவுடம்மன் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரு கைகளிலும் கத்தியால் கீறி, ரத்தம் சொட்ட, சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கத்தி போடும் வேண்டுதல் குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், ஒருமுறை அம்மனை ஆடிப்பாடி, துதித்து அழைத்து வரும்போது, சலங்கை ஒலி சப்தத்துக்கு ஏற்ப முன்னேறி செல்ல வேண்டும்; திரும்பி பார்க்கக்கூடாது என்று அம்மன் கட்டளையிட்டிருந்தார். சலங்கை சப்தம் கேட்காததால் பக்தர்கள் திரும்பி பார்த்தனர். கோபமடைந்த அம்மனிடம் மன்னிப்பு கோர, ஆண்டுதோறும் நவராத்திரி நாளில் விரதமிருந்து, விஜயதசமி நாளில் கத்தி போட்டு, ரத்தம் சொட்ட, சொட்ட நேர்த்திக்கடன் செலுத்துகிறோம் என்றார்.