வேம்பு இம்மரத்தின் காற்று வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியைத் தரும். நோயின் மூலத்தைப் போக்கும் ஆற்றல் வேப்பமரத்தின் காற்றுக்கு உண்டு. இம்மரத்தின் பட்டை, இலை, சாறு, கொட்டை, எண்ணெய் யாவும் கிருமிநாசினியாகும். பூத தோஷங்கள், பேய், பிசாசு, பிரம்மராட்சதர் போன்ற தீய சக்திகளை விரட்டும் சக்தி இம்மரத்துக்கு உண்டு. சித்த பிரம்மை, வைசூரி போன்ற நோய்களையும் நீக்கவல்லது.
வேப்பமரமானது ஊருக்கு காவல் தேவதையாகவும், உந்து சக்தியாகவும் விளங்குவதால், கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் கோயில்களில் வேப்பமரம் போற்றி வணங்கப்படுகிறது. காடுகள் மற்றும் வெட்டவெளிப் பகுதிகளிலுள்ள அரசு முதலான மரங்களில் பிரம்மராட்சதர் போன்ற தீய தேவதைகள் இருக்குமென்பதால், அகால நேரங்களில் அங்கு போகக் கூடாது. என்றும் தொடக்கூடாது என்றும் சொல்லிவைத்தனர். அவ்வாறு போகும் அவசியம் நேரிட்டால் வேப்பிலையுடன் செல்வார்கள் பாதுகாப்பு கருதி அம்மரங்களுடன் வேம்பையும் இணைத்துவைப்பர். எனவே தான் இந்த வேப்ப மரத்தை சர்வசக்திமயமாகவும், நாராயணரின் சக்தியான நாராயணியாகக் கருதி தனித்தும், அரசு முதலான மரங்களுடன் சேர்த்துவைத்தும் வழிபட்டனர். இறையருளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு நம் முன்னோர் காட்டிய உயர்வான வழி இது. வேப்ப மரக் கட்டையில் சூரியதேவனின் வடிவத்தை செய்து வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று சாத்திரங்கள் உரைக்கின்றன. தீயவர்களை விரட்ட செய்யப்படும் வேள்விக்கு ஏற்ற சமித்தாக வேம்பு விளங்குகிறது.
அரச மரத்தை மரங்களின் அரசன் என்று ஆண் பாலாகவும், வேப்ப மரத்தை அரசி என்று பெண் பாலாகவும் சிறப்பித்துக் கூறுவர். இவ்விரண்டையும் தனித்தனியாக கோயில்களில் வழிபடுகின்றனர். இரண்டையும் ஓரிடத்தில் ஒன்றாக நட்டு வளர்த்து, அவற்றுக்குத் திருமண வைபவம் நடத்திவைத்து, பின்பு தெய்வத் தம்பதிகளாக வழிபடுவதும் சிறந்த வழிபாட்டு நெறியாகும். நாராயணராகவும் நாராயணியாகவும் எண்ணி வழிபடுவதால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஈடேறும். நற்பிள்ளைப்பேறும் வாய்க்கும் எல்லாவித தோஷங்களும் நீங்கும்.
அரசு, வேம்பு திருமணச் சடங்கென்பது மிகவும் புனிதம் வாய்ந்தவொன்று. முறையாக செய்துவைக்கப்படும் திருமணத்தால் முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். பிறந்தகால ஜாதகத்திலுள்ள வாழ்க்கைத்துணை தோஷம், பிள்ளைச் செல்வதோஷம் நாக தோஷங்கள் விலகும். விதிமுறைப் படி செய்யப்படும் பூஜை, திருமணம், 108 முறை வலம்வருதல் ஆகியவற்றால் விரும்பிய எப்பயனையும் பெறலாம். கோடி கன்னிகா தானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை ஒரு அரசு வேம்பு திருமணத்தால் பெறலாம்.
எல்லா தெய்வாம்சமும் பொருந்திய அரசமரம் இருக்கும் பகுதி மிகவும் புனிதமானது. எனவே இம்மரத்தற்கடியில் பாதபீடமாக கட்ட கல் அல்லது கருங்கல்லால் ஒரு மேடை அமைக்க வேண்டும். அரச மரத்தடியில் விநாயகரையோ, நாகரையோ, இஷ்ட தெய்வங்களையோ சூலம் முதலான குறியீட்டு உருவிலோ சிலைகளாகவோ பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு செய்யப்படும் பிரதிஷ்டைகளால் விரும்பிய பயனை விரைந்து பெறலாம். பூஜை, ஹோமம், பித்ரு காரியங்கள் செய்வதற்கும் அரசமரப் பகுதி ஏற்ற இடமாக உள்ளது.
என்று அச்வத்த (அரசமர) மகாத்மியம் கூறுகிறது. அதாவது, நம் பாவங்களை ஏற்று நம்மைப் புனிதப்படுத்தி நாம் விரும்பியதை அளித்து நம்மை உய்வித்து மேம்படுத்துவது அரசமரம் என்று கூறுகிறது. அனைவரும் இம்மைப் பயன், மறுமைப் பயனை அடைய எளிய வழியாக தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை மன ஒருமைப்பாட்டுடன் ஜபித்துவருமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. தெய்வம், அரசமரம், துளசிச் செடி, கோமாதா, குரு போன்ற ஏதாவதொரு மந்திரத்தினை ஜெபிக்கலாம்.
கோ என்னும் பசுவிடமிருந்து பெறப்படுவதாலேயே பால் முதலானவை கவ்யம் எனப்படுகின்றன. தெய்வ மூர்த்தங்களுக்கு பசும் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதை ஆகமங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. பசுவின் நிறத்துக்கேற்ப பஞ்ச கவ்யங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கபிலநிறப் பசுவின் சிறுநீர், கருமை நிறப் பசுவின் சாணம், வெண்ணிறப் பசுவின் பால், புகைநிறப் பசுவின் தயிர், சிவப்பு நிறப் பசுவின் நெய் ஆகியவை சிறப்புமிக்கவை. மேலும் அனைத்து வண்ண பசுக்களிடமிருந்து கிடைக்கும் கோரோசனையும் உத்தமமான கவ்யமாகும். இவற்றிலிருந்தே நன்மை தரும் பல பொருட்கள் தோன்றியதாக சுப்ரபேத ஆகமம் குறிப்பிடுகிறது.
சிவபெருமானுக்குகந்த சிறப்புமிக்க தூபப்பொடியான குங்கிலியம் பசுவின் சிறுநீரிலிருந்தே தோன்றியது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனார் இந்த தூப கைங்கர்யத்தினால் சிவகதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவனுக்குப் பிரியமானதும், மகாலட்சுமி நித்தியவாசம் புரிவதுமான வில்வமரம் சாணத்திலிருந்தே தோன்றியது. மேலும் உத்தம மலர்களான தாமரையும் குவளையும் சாணத்திலிருந்தே தோன்றின.
பாலிலிருந்து உலகிற்குத் தேவையான உயிர்சக்திமிக்க விதைகள் தோன்றின. அனைத்தும் சித்திக்கத் தேவையான பரிணாம சக்தியான மங்களங்கள் தயிரிலிருந்து தோன்றின. தேவர்களுக்கு மிகவும் விருப்பமானதும், ஆயுளைத் தருவதுமான அமிர்தம் நெய்யிலிருந்து தோன்றியது. இவ்வாறு, சர்வதேவதா சொரூபமான பசுவை கன்றுடன் சேர்த்துவைத்த பூஜை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
பசுவை வலம் வந்து வணங்குவதற்கான துதி.
ஸர்வ காமதுகே தேவி ஸர்வ தீர்த்தாபிஷேசிநி பாவநி சுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே ஸௌரபேயி நமஸ்துப்யம் வரதே யக்ஞரூபிணி ஆயுராரோக்ய மைச்வர்யம் தேஹிமே கபிலாம்பிகே
அரச மரத்திலோ வானத்திலோ கருடனைக் காண்பது நமக்கு நன்மை தருவதாகும். ஞாயிறன்று கருட தரிசனம் கண்டால் சுப காரியங்கள் ஈடேறும். திங்களன்று கண்டால் எண்ணங்கள் ஈடேறும். செவ்வாயன்று கண்டால் உணவுப் பஞ்சம் தீரும்; நல்ல உணவு கிடைக்கும். புதன்கிழமை கண்டு வணங்கினால் அகால மரணம் அகலும். வியாழனன்று காண்பது மனத்துயரைப் போக்கும். வெள்ளியன்று தரிசித்தால் பெரிய சிரமங்கள் நீங்கும். சனிக்கிழமையில் காண்பது பதவி உயர்வையும் பெருமைகளையும் பெற்றுத் தரும். திருமாலின் வாகனமும், வினதையின் குமாரனும் பட்சிராஜனுமாகிய கருடனை தரிசனம் செய்யும் காலத்தில் கீழுள்ள மந்திரத்தைக் கூறி வணங்கினால் மேற்சொன்ன நன்மைகளை நிறைவாகப் பெறலாம்.
நற்கதி தரும் நற்செயல்களைச் செய்ய வேண்டுவது நமது கடமை. துளசிவனம் வைத்து வளர்த்தால் பாவம் அகலும். மரங்களை வளர்ப்பது இகத்திலும் பரத்திலும் சுகம் தரும். சுமங்கலி பூஜை செய்தால் சவுமாங்கல்யம் கிட்டும். புதிதாய் கிணறு, குளம் வெட்டுவது அல்லது புதுப்பிப்பது, தாய்க்கு மகன் பட்ட கடன்களைத் தீர்க்கும். கோயிலை பெருக்கித் தூய்மை செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டால் சொர்க்க பாக்கியத்தை அடையலாம்.
செல்வத்தைப் பெற லட்சுமிக்குரிய ஸ்ரீசூக்தத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பசுவை வணங்குவதால் அனைத்து தேவதைகளின் அனுக்கிரகமும் கிட்டும். எப்போதும் விபூதியையும் ருத்ராட்சத்தையும் அணிந்திருந்தால் நோய்கள் பாவங்கள் அகலும்; ஆரோக்கியம் புனிதத்தன்மை, ஆன்மபயனைத் தரும். பசுவின் சாணமும், பசுவின் சிறுநீரும் லட்சுமியும் கங்கையுமாக விளங்குபவை. எனவே இவை உடல், பொருள், இடம் ஆகியவற்றைப் புனிதப்படுத்த எங்கும் உபயோகிக்கத்தக்கவை.
கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது எல்லாவித பாவங்களையும் போக்கும்; அனைத்து நன்மைகளையும் தரும் அறுகம் புல்லை தினமும் கோயிலில் அர்ப்பணித்தால் கெட்ட கனவுகள் நீங்கும். தினமும் சூரியனை வழிபடுவதால் கண் நோய் வராமல் காக்கலாம். ஆரோக்கியம் மேம்படும். சிவ என்றும் ராம என்றும் இரு எழுத்துக்களை பலமுறை உச்சரித்திட பிறவிப் பயன் கிட்டும். ஆஞ்சனேயரை எண்ணினால் தைரியம், பலம் கிட்டும். குருவை வணங்கினால் ஞானம் பெறலாம். இத்தகைய வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் கூட ஆன்ம முன்னேற்றம் அடையலாம்.