பதிவு செய்த நாள்
24
அக்
2015
11:10
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், 1030வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, இரண்டாம் நாளான நேற்று பேரபிஷேகம் மற்றும் ராஜராஜ உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1030வது சதய விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. உலகப்புகழ் பெற்று விளங்கும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன் பிறந்த நாளை, அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் நாள் விழாவான, நேற்று காலை கோவிலில் இருந்து யானை ஊர்வலம் தொடங்கி, ராஜராஜன் பூங்காவில் உள்ள ராஜராஜ சோழன் உருவச்சிலை இருக்கும் இடம் சென்றடைந்தது. கலெக்டர் சுப்பையன், நீதிபதி மகாதேவன், சதய விழா குழுத் தலைவரும், தஞ்சாவூர் எம்.எல்.ஏ.,வுமான ரங்கசாமி, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஆகியோர் ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். காலை 8 மணிக்கு, திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமி தலைமையில், திருமுறை வீதிஉலா நடந்தது. காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு தேன், தயிர், மஞ்சள், பால், பழங்கள் ஆகிய, 48 வகையான அபிஷேகம் செய்யப்பட்டன. அபிஷேகத்தை காண பல்வேறு பகுதியில், இருந்த வந்த சுற்றுலா பயணிகள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாலை திருமுறை பன்னிசை அரங்கம், வீணை இசை, செல்வி மற்றும் குழுவினரின் பரதநாட்டியம், நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டி மன்றம் போன்றவை நடந்தன. இரவு 9.30 மணியளவில் நாட்டிய நாடகத்துடன் விழா நிறைவடைந்தது.