இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவினி மந்திரத்தை அறிந்திருந்தார் சுக்கிர பகவான் அதன் பலனாக அழியா வரம் பெற்றுத் திகழ்ந்தார்கள் அசுரர்கள். இந்த மந்திரத்தை அறிந்து வந்தால் தேவர்களுக்குப் பலமாக இருக்குமே என்று கருதிய குருபகவான். தனக்கும் தாராவுக்கும் பிறந்த மகனான கசனை அழைத்து எப்படியாவது சஞ்ஜீவினி மந்திரத்தைச் சுக்கிரனிடம் இருந்து அறிந்து வரும்படி அனுப்பிவைத்தார். அதன்படியே, கசன், சுக்கிரனிடம் சென்று அவருடைய நல் அபிமானத்தைப் பெற்றான். இதையறிந்த அசுரர்கள் கோபம் கொண்டனர். பல வழிகளில் கசனை அழிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், தன் மகள் தேவயானி கசன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக, ஒவ்வொரு முறையும் கசனைக் காப்பாற்றி வந்தார். சுக்கிரன், எனவே, சுக்கிரனாலும், கசனைக் காப்பாற்ற முடியாதபடி, அவனை அழிக்கத் திட்டமிட்டனர் அசுரர்கள்.
கசனைக் கொன்று, அவனது சாம்பலை பானகத்தில் கலந்து சுக்கிரனுக்கே பருகக் கொடுத்தனர். இப்போது, தனது வயிற்றில் இருக்கும் கசனை உயிர்ப்பித்து, அவன் வெளியே வந்தால், சுக்கிரன் இறந்துவிடுவார் என்பது அவர்கள் திட்டம் இந்த நிலையில் சுக்கிரன் ஓர் உபாயம் செய்தார். வயிற்றுக்குள் இருக்கும் கசனுக்கு சஞ்ஜீவினி மந்திரத்தை உபதேசித்தார். அவன் உயிர் பெற்றுத் தன் வயிற்றில் இருந்து வெளிவந்ததும், அதே சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் தன்னை உயிர்ப்பிக்கும்படி பணித்தார். அதன்படியே முதலில் சுக்கிரர் கசனை உயிர்ப்பித்தார். அவருடைய வயிற்றுக்குள் இருந்து வெளியேறிய கசன், சஞ்ஜீவினி மந்திரத்தின் மூலம் சுக்ராச்சார்யரை உயிர்ப்பித்தான். ஆக, கசனுக்கு சஞ்ஜீவினி மந்திரம் உபதேசம் கிடைத்தது. இந்தச் சம்பவத்தின் மூலம் குருபகவானின் ஸித்தம் நிறைவேறியது.