பதிவு செய்த நாள்
26
அக்
2015
04:10
படைக்கும் கடவுள் பிரம்மதேவனின் மானஸ புத்திரர்கள் சப்த ரிஷிகள் அவர்களில் ஒருவர் ஆங்கீரஸர். இவருடைய மனைவி வஸிதா, ஸ்ரத்தாதேவி என்றும் மற்றொரு பெயர் உண்டு. அக்னி பகவானின் பிரதான பணி, ஆஹுதி என்பார்களே, அப்படி அக்னி குண்டத்தில் நாம் சமர்ப்பிக்கும் தானியங்களையும் பிரசாதங்களையும் உரிய தெய்வங்களிடம் சேர்க்கும் பணியாகும். ஒருமுறை, இந்தப் பணியில் சலிப்பு ஏற்பட்டு, அதைக் கைவிட்டுவிட்டார். அக்னி பகவான். அதனால் யாகம் ஹோமம் எதுவுமே உலகில் நடைபெறவில்லை. தெய்வங்களை வணங்க முடியவில்லை. அதன் விளைவாக, மழை பொய்த்தது; உலகில் பஞ்சம் தலைவிரித்தாடியது; மக்கள் மிகவும் துன்பம் அடைந்தனர். இதைக் கண்ட ஆங்கீரஸ முனிவர், உலக நன்மைக்காக அக்னி தேவன் விட்டுச் சென்ற பணியைத் தானே செய்யத் தொடங்கினார். உலகம் மீண்டும் செழித்தது.
அக்னி தேவனுக்கு மனசாட்சி உறுத்தியது. தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டோமே என்பதை உணர்ந்து, வருந்தினார் தனது பணியை சிரமேற்கொண்டு செய்த ஆங்கீரஸ முனிவரிடம் வந்து அவரை வணங்கி, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். அதைக் கண்ட ஆங்கீரஸர் மிகவும் கருணையுடன் வருந்தாதே! செய்த தவற்றை உணர்ந்துவிட்டால் மன்னிப்பு உண்டு. உனக்கு என்ன வேண்டும். கேள்! என வினவினார். அவரிடம் கருணையும் பெருந்தன்மையும் கொண்ட தங்களின் மகனாகப் பிறக்க வேண்டும். என்று வேண்டினார். அக்னி முனிவரும் அப்படியே ஆகுக என்று வரம் தந்தார். ஏற்கனவே, ஆங்கீரஸ முனிவருக்கு ஆறு மகன்கள் உண்டு. இவர்களுக்குப் பின், அக்னிதேவன் ஆங்கீரஸ முனிவரின் ஏழாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு பிரகஸ்பதி என்று பெயர் இவருக்கு பின், பானுமதி என்ற பெண்ணும் பிறந்தாள். கிரக பதவி கிடைத்தது எப்படி?
பிரஹஸ்பதி ஓர் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். என விரும்பினார். அவருடைய தந்தை அவரிடம் இருந்தே கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பிரஹஸ்பதி காசிக்குச் சென்று சிவலிங்கம் ஸ்தாபித்து, கடுமையான தவத்தை மேற்கொண்டார். பதினாயிரம் தேவ ஆண்டுகள், பிரஹஸ்பதியின் தவம் தொடர்ந்தது அதன் பலனாக சிவனாரின் தரிசனமும் கிடைத்தது. ஆடல்வல்லானைத் தரிசித்து ஆனந்தக்கூத்தாடினார் பிரஹஸ்பதி, இறைவா, கருணைக்கடலே... பெரும்பேறு பெற்றேன் என்று பலவாறு வணங்கித் தொழுதார். சிவபெருமானோ, பிரஹஸ்பதி! உன்னுடைய தவ வலிமையைக் கண்டு நான் மகிழ்ந்தேன் அதற்குப் பரிசாக இன்று முதல் நீ தேவர்களுக்கு எல்லாம் ஆசானாக விளங்குவாய். குரு பகவான் என்றே அழைக்கப்படுவாய். கிரக அதிபதிகளில் ஒருவனாய் கிரகப் பதவியையும் உனக்கு யாம் அளித்தோம் என்று வரம் அளித்தார். அன்று முதல் பிரஹஸ்பதி குருபகவான் என்று அழைக்கப்பட்டு, நவகோள்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.