பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2011 11:07
திருநெல்வேலி : சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பாபநாசம் கோயில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழா வரும் 20ம் தேதி நடக்கிறது. வன பகுதியில் பல்லுயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாளையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.தொடர்ந்து தலைமை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் மல்லேசப்பா கூறியதாவது:பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழாவில் சுமார் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் பங்கேற்பர். இரவு நேரங்களில் 2 லட்சம் மக்கள் கோயில் பகுதியில் தங்கியிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திருவிழாவையொட்டி வன பகுதியில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதை தவிர்க்க சுமார் 250 தற்காலிக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் கொண்டு வரக் கூடாது. செக்போஸ்டில் இவை சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமையல் செய்ய வன பகுதியில் மரங்களை வெட்ட கூடாது. பொதுமக்களுக்கு வசதியாக செக்போஸ்ட் மற்றும் கோயில் பகுதியில் விறகுகள் விற்பனை செய்யப்படுகிறது.ஆடுகளை வெட்ட தனி தொட்டி வசதியும், அதனை உரித்து கழுவ தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். வன பகுதியில் வாகனங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. பொதுமக்களை வன பகுதியில் இறக்கிவிட்டு பின்னர் வாகனங்கள் திரும்பி செல்ல வேண்டும். ஆற்றுத் தண்ணீரை மாசுபடுத்தும் காரியங்களை செய்ய கூடாது. சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த 500 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுவர். சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுசூழல் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கள இயக்குனர் கூறினார்.இதில் துணை இயக்குனர் வெங்கடேஷ், சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, கட்டளைமலை எஸ்டேட் வசந்திராணி, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவன பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.