முருகப் பெருமானின் படைவீடுகளாக 6 தலங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன. அவற்றுள் முதலாவதாக திகழ்வது திருப்பரங்குன்றம் மற்றவை தி ருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி, (பழனி), திருவேரகம் (சுவாமி மலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை. படைவீடு என்பது, பகைவரோடு போர் புரியும் பொருட்டு தனது படைகளுடன் ஒரு தலைவன் தங்கியிருக்கும் இடத்தின் பெயராகும். அதன்படி, அசுரன் சூரபத்மனோடு போர் புரிய செல்லும் முன்பு, முருகப் பெருமான் தங்கியிருந்த இடங்கள்தான், இன்று அவரது அறுபடை வீடுகளாக அழைக்கப்படும் தலங்கள். இந்த அறுபடைக்கும், ஆற்றுப்படைக்கும் நிறையவே தொடர்பு உள்ளது.
பொருள் பெற்ற ஒருவன், வறியவன் ஒருவனைக் கண்டு, இவரிடம் சென்றால் போதும் பொருள் பெற்று திரும்பலாம் என்று ஆற்றுப்படுத்துவதை, அதாவது வழிப்படுத்துவதை ஆற்றுப்படை என்பார்கள். இவ்வாறு ஒருவரிடம் பொருளைப் பெறுவதுபோல் தெய்வங்களின் அருளைப் பெறவும் பல அடியார்கள். மகான்கள் ஆற்றுப்படுத்தினார்கள். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையே அதற்கு சான்று. இதன்படி, நக்கீரர் முருகப்பெரு மானை புகழ்ந்து பாடிய ஆற்றுப் படை வீடுகளே இன்றைய அறுபடை வீடுகளாக மாறியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.