பதிவு செய்த நாள்
04
நவ
2015
10:11
வடபழனி : வடபழனி ஆண்டவர் கோவிலில், திருமணம் நடத்த வரும் ஏழை பக்தர்களிடம், இடைத்தரகர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தும் பொறுப்பை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடபழனி ஆண்டவர் கோவிலில், முகூர்த்த நாட்களில் நுாற்றுக்கணக்கான திருமணங்கள் நடக்கின்றன. சென்னையை சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து, ஏழை பக்தர்கள் பலர், அந்த கோவிலில் திருமணம் செய்ய வருகின்றனர்.
பறிப்பு, மோசடி : அதற்காக, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறும் படிவம் வாங்கும்போது, அங்குள்ள இடைத்தரகர்கள், தாங்கள் திருமணத்தை நடத்தி தருவதாக கூறி, 12 ஆயிரம் ரூபாய் வரை, கறந்து விடுகின்றனர். அதேநேரம், வெளியாட்கள் உதவியுடன் திருமணம் நடத்த, பக்தர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. சில இடைத்தரகர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு, மோசடியும் செய்கின்றனர்.இவ்வாறு, கோவிலுக்குள் நடக்கும் அனைத்து திருமணங்களும், இடைத்தரகர்கள் ஏற்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்பது, எழுதப்படாத விதியாக உள்ளது.அதனால், ஏழை, எளிய பக்தர்கள், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். கோவில் நிர்வாகத்தினரும், இதை கண்டுகொள்வதில்லை.இடைத்தரகர்கள் ஜாக்கிரதை என்கிற என்ற போர்டை கண்ணுக்கு தெரியாமல் வைத்திருக்கும் கோயில் நிர்வாகம், கோவிலின் பிரதான வாசலில் வைத்தால், திருமணம் செய்ய வரும் எழை மக்கள் ஏமாந்து போகாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
இதுகுறித்து, அனுமதி படிவம் பெற வந்த சாமிநாதன் என்பவர் கூறியதாவது: என் மகளின் திருமணத்திற்காக நான் அனுமதி படிவம் பெற்றவுடன், என்னை சில தரகர்கள் சூழ்ந்து கொண்டு, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தினர். அதற்கு அதிக அளவில் பணமும் கேட்டனர்.என்னைப் போன்றோர், வசதி இல்லாத காரணத்தினால் தான், கோவிலில் திருமணம் செய்து கொள்ள செல்கிறோம். ஆனால் அங்கும் எங்களை தொந்தரவு செய்கின்றனர். அவர்களை மீறி, வெளியாட்கள் உதவியுடன் திருமணம் நடந்தால், அவர்களையும் இடைத்தரகர்கள் மிரட்டுகின்றனர்.இதற்கு உடந்தையாக உள்ள கோவில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் தலையீடு: இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் அ.இளம்பரிதி கூறியதாவது: இடைத்தரகர்கள் தொந்தரவு செய்யும்போது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவிலில் காவலாளிகள் மூலம் இடைத்தரகர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீட்டால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும் இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
புகார் தேதியை தெரிவிக்க முடியாது: கோவிலில் இடைத்தரகர்கள் அத்துமீறல் குறித்து, காவல் நிலையத்தில் எந்த தேதியில் புகார் கொடுக்கப்பட்டது என, பாரிமுனையை சேர்ந்த லட்சுமிபதி என்பவர், தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ், வடபழனி ஆண்டவர் கோவில் செயல் அலுவரிடம் கேட்டுள்ளார். அதற்கு, கோவில் செயல் அலுவர் , சட்டப்பிரிவு 2 (ஊ)ன் படி தகவல் அளிக்க இயலவில்லை என, பதில் அளித்துள்ளார்.