பதிவு செய்த நாள்
07
நவ
2015
10:11
திண்டுக்கல்: சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுகோள்கள், பரிகார பூஜைகள் காலம் காலமாய் தொன்று தொட்டு இருந்து வருகின்றன. திருமணம், தீராத நோய்கள், குழந்தை பேறு, கஷ்டங்கள், வேலைவாய்ப்பு என, நல்லது நடக்க வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்வது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. இதற்காக நேர்த்திக் கடன் செய்வதும் மனிதர்களுக்கு தகுந்தமாதிரி மாறுபடவே செய்கிறது. நான் உனக்கு இதைச் செய்கிறேன். நீ எனக்கு அதைச் செய் என ஆணடவனிடம் அன்பு வேண்டுகோளாய் அது நடக்கிறது. உடலை வருத்தியோ, உள்ளம் நெகிழவோ, பொருட்களை வழங்கியோ எந்த வடிவிலும் அந்த வேண்டுகோள் இருக்கலாம். திண்டுக்கல் அருகில் பெரியகோட்டை கிராமத்தில் கோட்டை முனியப்பன் கோவிலிலும் நேர்த்தி கடன் செலுத்தும் சற்று வித்தியாசமாக உள்ளது. இக்கோவிலில் நேர்த்தி கடனாக மக்கள் வேல் (அதாங்க வேலாயுதம்) செலுத்துகின்றனர். எந்தச் சீமையில் இருந்தாலும், நினைத்ததை நடத்தி தந்தாயாடா முனி என, மக்கள் ஒவ்வொருவருடமும் மாசி மாதம் வரும் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். வேண்டியது நிறைவேறியபின் வேல் செய்து கோயில் முன் நட்டு வைக்கின்றனர். இப்படி நிறைவேறிய வேண்டுகோள் ஏராளம் என, குத்தி வைத்த வேல்கள் சொல்லாமல் சொல்கின்றன. எல்லாம் அந்த முனியப்பன் செயல் என்கின்றனர் பக்தர்கள்.