பதிவு செய்த நாள்
12
நவ
2015
10:11
புதுச்சேரி: புதுச்சேரி கோவில்களில், தீபாவளி நோன்பு வழிபாடு நேற்று நடந்தது. புதுச்சேரியில், நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து, அமாவாசை தினமான நேற்று, கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு நடந்தது. மண் சட்டியில் பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூக்கள், பழங்கள், வில்வ இலை, நோன்பு கயிறு ஆகியவற்றை வைத்து, கோவிலுக்கு எடுத்து சென்று, வழிபாடு செய்தனர். படையல் முடிந்து, நோன்பு கயிறு அணிந்தனர்.அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், புதுச்சேரி சின்ன சுப்ராய பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், திலாசுப்பேட்டை, லாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், நோன்பு வழிபாட்டுக்கு ஏராளமானோர் குவிந்தனர்.