பதிவு செய்த நாள்
29
ஜூலை
2011
12:07
பூந்தமல்லி : புதன் தலமான கோவூர் சுந்தரரேசுவரர் கோவிலில், சிதிலமடைந்த தேர்களை சீரமைத்து, 25 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட தேர்பவனிக்கு, தமிழக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது கோவூர் சவுந்தராம்பிகை உடனுறை திருமேனீசுவரர் என்கிற சுந்தரரேசுவரர் கோவில். சுந்தரசோழனின் காலத்தில் கி.பி., 965ல் இக்கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தமிழகத்தின் 1,008 சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், சேக்கிழார் பெருமான் மற்றும் தியாகராஜரால் பாடல் பெற்றதுமான சிறப்பினை கொண்டது. சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்களில், புதன் தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா என்ற பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தேர்உற்சவமான ஏழாவது நாளில் விநாயகர், சுந்தரேசுவர், சவுந்தராம்பிகை, முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் தேரில், கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 1985ம் ஆண்டு நடந்த பிரம்ம உற்சவத்தில், நடந்த விரும்பத் தகாத சம்பவங்களால் தேர்பவனி நிறுத்தப்பட்டது. இதனால், கோடிக்கணக்கில் செலவழித்து அமைத்த ஐந்து தேர்களும் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, செல்லரித்துபோனது. பத்து நாட்கள் உற்சவம் நடந்த சுந்தரேசுவரர் கோவிலில், இன்று ஒருநாள் மட்டுமே பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலில் 37 ஆண்டுக்கு பின், கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால்,தேர் பவனிமட்டும் நடைபெறவில்லை. ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுள்ள முதல்வர் ஜெயலலிதா,சிதிலமடைந்த தேர்களை சீரமைத்து, இக்கோவிலில் 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட தேர்பவனிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்தன் கூறும்போது, தேர் சீரமைக்க ஒன்பது லட்சம் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு தேர் செய்ய தற்போது ஒரு கோடி ரூபாய் செலவாகும். ஐந்து தேர்களையும் உடனே, சீர்செய்வது என்பது இயலாத காரியம். மற்ற கோவில்களை போல,சேவார்த்திகள் இங்கு இல்லை. நன்கொடையாளர்கள் மற்றும் அரசு நிதி உதவி அளித்தால் மட்டுமே தேர்கள் சீரமைக்க முடியும். கோவில் குளத்தின் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டப்படும். அதுபோல, மடப்பள்ளி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைக்கப்படும், என்றார். ஓதுவார் நியமிக்கப்படுவாரா?சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஓதுவார், இரண்டு குருக்கள், காவலாளிகள் என முன்னர் 15 பேர் பணிபுரிந்தனர். தற்போது ஆறுபேர் மட்டுமே உள்ளனர். இதில் மூன்றுபேர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள். பத்து ஆண்டுகளாக பூஜை செய்யும் குருக்கள் உள்பட மூன்றுபேர் தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். மடப்பள்ளியில் பிரசாதம் தயாரித்து, வழங்க என இரண்டு பேர்;ஓதுவார் நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.