பதிவு செய்த நாள்
16
நவ
2015
10:11
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர், 9ம் தேதி, 43 சன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு கும்பாபி?ஷகம் நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உட்பட, ஐந்து சன்னதிகள், ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம் உட்பட, 10 கோபுரங்களுக்கும் வரும், 18ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, ஆயிரங்கால் மண்டபத்தில், பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு முதல்கால யாக பூஜை, அனுக்ஞை, வாஸ்து ஹோமம், அங்குரார்ப்பணம், சாற்று முறை போன்ற நிகய்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 9 மணிக்கு, தங்கக் குடத்தில் காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து, கோவில் யானை மீது வைத்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கடங்களில் நிரப்பப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ள சன்னதிகளில் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. இதையொட்டி, திருச்சி எம்.பி., குமார், எம்.எல்.ஏ., பரஞ்சோதி உட்பட முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்து விட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சுந்தர் பட்டர் தலைமையிலான பட்டாச்சாரியர்கள் செய்திருந்தனர்.