பதிவு செய்த நாள்
17
நவ
2015
12:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ரங்கா ரங்கா கோபுர நுழைவாயிலுக்கு, தசாவதார சிலைகள் வடிக்கப்பட்ட பிரம்மாண்ட கதவு நேற்று காலை பொருத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மகா சம்ப்ரோஷணம் நாளை, காலை நடக்கிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று காலை கோவிலில் மூலஸ்தானம் மற்றும் அருகிலுள்ள துலுக்க நாச்சியார் மண்டபம் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. சம்ப்ரோஷணத்துக்கு பின் பக்தர்கள் மூலவரை தரிசிக்க ஏதுவாக, வரிசையில் செல்ல தடுப்புகள் அமைத்துள்ளனர். ராஜகோபுரம், சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள கதவுகளுக்கு வாழை மரங்கள் கட்டியும், தென்னை, பாக்கு பச்சை மட்டை பழங்களை கொண்டு அலங்கரித்த தோரணங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள தடுப்பு வேலிகள் மற்றும் ஓவியங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் மேற்கொண்டு உள்ளனர். நாளை நடைபெறும் சம்ப்ரோஷணத்தின் போது, தங்க விமானம் பகுதிக்கு மேலே செல்ல படிக்கட்டுகள் அமைத்தும், அவற்றின் உறுதித் தன்மை சோதிக்கும் பணி மேற்கொண்டனர். கோவிலில் ரங்கா ரங்கா கோபுரம், ஆயிரம் கால் மண்டபம், மணல் வெளிக்கு செல்லும் நுழைவாயில் கதவு ஆகியவற்றுக்கு பிரம்மாண்ட கதவுகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கோவிலின் பிரதான நுழைவாயிலான ரங்கா ரங்கா கோபுரத்தின் நுழைவாயிலுக்கு, ஏற்கனவே இருந்த கதவுகளை அகற்றி விட்டு, 15 லட்சம் ரூபாயில் செய்யப்பட்ட, இரண்டு டன் எடையுள்ள தேக்கு மரக்கதவுகளை நேற்று பொருத்தினர். இந்த கதவுகளில் பெருமாளின் அவதாரங்களான மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி அவதாரம் உள்ளிட்ட பத்து அவதாரங்கள் சிலைகளாக இடம்பெற்று இருந்தன. பித்தளை குமிழ்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தி இருந்தனர். அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய இந்த பிரம்மாண்ட கதவு அனைவரையும் கவர்ந்தது. அதுபோல தாயார் சன்னதிக்கு பிரமாண்ட கதவு, அழகிய வேலைப் பாடுகள் கொண்ட நிலைக் கண்ணாடி ஆகியவை புதிதாக செய்து பொருத்தி, விழாவுக்கு தயார் படுத்தி வருகின்றனர்.