பதிவு செய்த நாள்
17
நவ
2015
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 25ம் தேதி மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அதிகாலை, 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரத்தின் அருகில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 72 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில், காலை, 6.49 மணிக்கு பஞ்சமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து முதல் நாள் விழாவில், காலை, 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் கண்ணாடி வாகனத்திலும், இரவு, 10 மணிக்கு மேல், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அதிகார நந்தி வாகனத்திலும், பராசக்தி அம்மன் ஹம்ச வாகனத்திலும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும், 22ம் தேதி, 63 அடி உயரமுள்ள மஹா ரத தேரோட்டமும் நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.