பதிவு செய்த நாள்
19
நவ
2015
11:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில், நேற்று முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. வழிவிடு முருகன் கோயில் கந்தசஷ்டி விழா நவ., 12 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர். * பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் சஷ்டி விழாவில், முருகன் - தெய்வானை திருக்கல்யாணம் பக்தர்களின் "அரோகரா கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா, நவ. 12ல் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நவ. 17 ல் முருகன், சக்தி வழங்கிய வேலுடன் மயில் வாகனத்தில் வீதியுலா வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முருகன், வள்ளி, தெய்வானையுடன் பட்டணப் பிரவேசம் நடந்தது. இதுபோன்று பாரதிநகர் செல்வகுமரன் கோயிலில் 30வது ஆண்டு கந்தசஷ்டி விழா நடந்தது. இங்கு நேற்று முன்தினம் சூரசம்ஹாரமும், நேற்று மாலை 6 மணிக்கு முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும் கோலா கலமாக நடந்தது. இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. இன்று காலை 10 மணிக்கு பாவாடை நைவேத்தியம், தீபாராதனையுடன் நிறைவடைகிறது.