பதிவு செய்த நாள்
20
நவ
2015
11:11
கோபி: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில், 35.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களில், அமரபணீஸ்வரர், ஆதிநாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பாரியூர் குண்டம் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குண்டம் விழா, டிச., 31ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில், மொத்தம், 13 நாட்களுக்கு தற்காலிக கடைகள் நடத்த சுங்கம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த, தண்டபாணி, 35.55 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். இவர்தான் கடந்த ஆண்டு, 33.33 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தார். இதேபோல் சைக்கிள் ஸ்டேண்டுக்கு கோபி முருகன் புதூர் கிருஷ்ணசாமி, 60 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்தார்.