தொடர்மழை எதிரொலி சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2015 11:11
சபரிமலை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சபரிமலையிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 17-ம் தேதி மண்டல சீசன் தொடங்கியது. மூன்று நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நாட்களிலுமே பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிகாலை நேரத்தில் காணப்படும் லேசான கூட்டத்தை தவிர்த்தால் இதர நேரங்களில் பக்தர்கள் குறைவாகவே உள்ளனர். இதனால் தற்போது வருகின்ற பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் மழை பாதிப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பிய பின்னரே தமிழக பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இந்நிலையில் நடை திறந்த அன்று முதல் சபரிமலையிலும் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் பக்தர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் என்று வெள்ளம் அதிகமானதால் திருவேணியில் பார்க்கிங் செய்யப்பட்ட பக்தர்களின் கார்கள் தண்ணீரில் மிதந்தது. இதை தொடர்ந்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து பெரிய கயிறுகளால் கார்ககளை மரத்தில் கட்டி போட்டனர்.
பின்னர் சன்னிதானம் மற்றும் பம்பை ஒலிபெருக்கிகளில் விளம்பரம் செய்யப்பட்டு காருக்கு உரியவர்கள் அழைத்து வரப்பட்டு கார்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கும், சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நேற்று அதிகாலை தண்ணீரின் அளவு குறைந்த பின்னரே பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகலில் வெயில் அடித்தது. மூன்று மணிக்கு மேகமூட்டம் அதிகமாகி மழை பெய்தாலும் சிறிது நேரத்தில் நின்று விட்டது. குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது.