பதிவு செய்த நாள்
04
டிச
2015
10:12
சபரிமலை: சபரிமலையில் நேற்று மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக நடைபெற்ற களப பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பெய்யும் பலத்த மழையால், சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருமானம் குறைந்துள்ளது. ’பெர்மிட்’ வாங்கிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க முடியாமல், கேரள அரசு போக்குவரத்துக்கழகம் தடுமாறுகிறது. சபரிமலையில் மண்டல சீசன் ஆரம்பித்த, நவ., 17 முதல், தமிழகத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால், வட மாவட்டங்களில் இருந்து, சபரி மலைக்கு செல்லும் பக்தர் கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.அதிகாலை நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களில், நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய முடிகிறது. கடந்த நவ., 30-ம் தேதி வரை உள்ள வருமானத்தை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 10 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். இதற்கிடையே, தமிழக மழையால், கேரள அரசு போக்குவரத்து கழகமும் தடுமாறுகிறது. கேரளாவிலிருந்து தமிழக நகரங்களுக்கு பஸ்களை இயக்க, கேரள அரசு போக்குவரத்து கழகம், பணம் செலுத்தி, பெர்மிட் பெற்றிருந்தது. பயணிகள் வரத்து சரிவர இல்லாததால், வருமானம் குறைந்து, அந்த அரசு பஸ் கழகம் தடுமாறுகிறது.