பதிவு செய்த நாள்
04
டிச
2015
12:12
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களுள் ஒன்றான கிரிகுஜாம்பிகை நாகநாதர்கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சேக்கிழாரின் ஆத்மார்த்த தலமான இங்குள்ள நாகநாதரை திருமால், பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும், கவுதமர், பராசரர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளதாக தல வரலாறுகள் கூறுகின்றன. இங்குள்ள கிரிகுஜாம்பிகை தனிகோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். மேலும் நாகநாதரின் இடபாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளில் இறைவியின் திருமுகத்தில் நிலவொளி படுவது சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு துணைவியருடன் ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த 27 ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று மாலை விழாவின் தொடக்கமாக காப்பு கட்டுதல் நடைபெற்றது. இன்று 4ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு விழா கொடியேற்றம் நடைபெற்றன. அதை தொடர்ந்து, பஞ்சாமூர்த்திகளின் தேரோட்டமும், இரவு வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும், விழா நாட்களில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி,அம்மன் வீதி உலா காட்சி நடக்கிறது. வரும் 10ம் தேதி மாலை 6மணிக்கு திருக்கல்யாணமும், 12ம் தேதி காலை 6.45 தேரோட்டமும், 13 ம் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த விழா தொடர்ந்து வருகிற 14ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.