சபரிமலை: சபரிமலையில் இன்று மதியம் முதல் பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக்கப்படும். இதற்காக கேரள போலீசாருடன் கர்நாடகா-ஆந்திரா போலீசாரும் இணைந்துள்ளனர். தமிழக போலீசார் மட்டும் வரவில்லை. டிச.6., பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் தங்கியுள்ள அனைவருக்கும் அடையாள அட்டை இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடையாளஅட்டை இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முதல் 7-ம் தேதி 11 மணி வரை பாதுகாப்பு மேலும் கடுமையாக்கப்படுவதாக சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி சுரேந்திரன் கூறினார்.
1600 கேரள போலீசாருடன் 200 ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போலீசார் சபரிமலையில் உள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படையினரும், பேரிடர் நிவாரண படையினரும் உள்ளனர். பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இருமுடி தவிர எந்தவிதமான பைகளும் சன்னிதானத்துக்கு கொண்டு செல்ல முடியாது. 5 மற்றும் 6-ம் தேதி இரவில் நடை அடைக்கப்பட்ட பின்னர் 18-ம் படியேற பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடையாள அட்டை இல்லாத எவரும் சன்னிதானம் பக்கம் செல்ல அனுமதி இல்லை.
சன்னிதானம் செல்லும் எல்லா நுழைவு வாயில்களிலும் மெட்டல்டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அபிஷேகத்துக்கு கொண்டுவரப்படும் நெய் பாத்திரமும் மெட்டல் டிடெக்டர் கருவியால் சோதனை செய்யப்படும். நெய்தேங்காய் உடைக்கவும், காணிக்கை போடவும் மாற்று இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஐபி தரிசனத்துக்கும கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் ஆப்சென்ட்: வெளிமாநில குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அண்டை மாநில போலீசாரும் இங்கு பணியில் அமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில் கேரள போலீசின் கடிதத்தை ஏற்று ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போலீசார் வந்து விட்டனர். ஆனால் தமிழக போலீஸ் நேற்று வரை வரவில்லை.