பதிவு செய்த நாள்
05
டிச
2015
10:12
ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி மலைக்கோயிலில் "வேண்டுதல் உருவாரங்கள் வழிபாடு திறந்தவெளியில் நடக்கிறது. ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. கால்நடைகளுக்கான வேண்டுதல் தெய்வமாக, இக்கோயில் பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனிவாரம், கிருஷ்ண ஜெயந்தி விழாக்களின்போது மட்டுமே அதிக கூட்டம் இருக்கும். சில மாதங்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கால்நடை வளர்ப்பு தொழிலை துவங்குவோரும், மேற்கொண்டு வருவோரும் மட்டுமின்றி, ஓரிரு கால்நடைகளை வைத்திருப்போரும் அவற்றின் நலனுக்காக இங்கு வேண்டுவது வழக்கம். ஆடு, மாடு வளர்ப்பின்போது புதிதாக கன்று பிரசவிக்கும் பசுவின் பாலை அபிஷேகத்திற்காக கொண்டு வருவர். கால்நடை வளர்ப்போரின் வேண்டுதலில் ஒரு பகுதியாக, ஆடு, மாடு, கோழி, சேவல் போன்றவற்றின் உருவங்களை வாங்கி, கோயிலில் காணிக்கையாக வைத்து வழிபட்டுச்செல்கின்றனர். இதற்கான வழிபாட்டு மண்டபம், கோயிலின் தென்புற வெளிப்பிரகாரத்தில் உள்ளது.பராமரிப்பிற்காக இப்பகுதியின் மேற்கூரை அகற்றப்பட்டு பல மாதங்களாகியும், மீண்டும் வேயப்படாமல் உள்ளது. அதிக வெயில், மழைக்காலங்களிலும் திறந்த வெளி மண்டபத்தில் உருவங்களை வைத்து வழிபட வேண்டியுள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""விரைவில் இப்பகுதியில் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.