சபரிமலை:பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்பகல் 2மணிக்கு பின் புல்மேடு வரும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள், என கேரளா கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார். வண்டிபெரியாறு, உப்புப்பாறை, சத்திரம், புல்மேடு வழியாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மகரவிளக்கு நாளில் நடைபெற்ற விபத்துக்கு பின்னர் இந்த பாதையில் அரசு நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்திரத்துக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப் படுவதில்லை. இதனால் பெரும்பாலான பக்தர்களும் கால்நடையாகவே வருகின்றனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சிறிய பஸ்களை இயக்குவது வழக்கம். இந்த சீசனில் இன்னும் இயக்கப்படவில்லை.புல்மேடு கடந்த பின்னர் பக்தர்கள் அடர்ந்த காடு வழியாக வரவேண்டும். இதனால் மதியத்துக்கு பின்னர் வரும் பக்தர்கள் காட்டில் வழிமாறி காட்டுக்குள் சிக்கி சிரமப்பட வேண்டிவரும். இதை கருத்தில் கொண்டு பகல் இரண்டு மணிக்கு பின்னர் வரும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள், என கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார். இரண்டு மணிக்கு பின் வரும் பக்தர்கள் சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக புல்மேடு, சத்திரம் பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.