சபரிமலை: சுவாமி ஐயப்பன் ரோட்டில் பக்தர்களுக்காக வனத்துறை சார்பில், மருத்துவமனை கட்டப்படுகிறது. அடுத்த சீசனில் இது பயன்பாட்டுக்கு வரும்.நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், சரங்குத்தி ஆகியவை இருமுடி பக்தர்கள் சபரிமலைக்கு வரும் பாரம்பரிய பாதை. பிறகு பொருட்கள் கொண்டு வருவதற்காக சுவாமி ஐயப்பன் ரோடு அமைக்கப்பட்டது. தற்போது இது டிராக்டர் செல்லவும், பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பும் ஒருவழிப் பாதையாகவும் உள்ளது.இப்பாதையில் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடையாது. குறைந்த எண்ணிக்கையில் கடைகள் உள்ளன. இப்பாதை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தேவசம்போர்டும் எதுவும் செய்ய முடியவில்லை. இதை தொடர்ந்து பாதையின் மையப்பகுதியான சரல்மேட்டில், 30 லட்ச ரூபாயில் மருத்துவமனை கட்ட வனத்துறை முடிவு செய்துள்ளது. தரைத்தளத்தில் சிகிச்சை வசதியும், முதல் தளத்தில் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தங்க வசதியும் செய்யப்படும். அடுத்த சீசனுக்குள் கட்டுமான பணி முடிக்கப்பட்டு சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.