பதிவு செய்த நாள்
12
டிச
2015
12:12
தஞ்சாவூர் : நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவினை யொட்டி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களுள் ஒன்றான கிரிகுஜாம்பிகை நாகநாதர்கோவில் உள்ளது. சேக்கிழாரின் ஆத்மார்த்த தலமான இங்குள்ள நாகநாதரை திருமால், பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும், கவுதமர், பராசரர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளதாக தல வரலாறுகள் கூறுகின்றன. இங்குள்ள கிரிகுஜாம்பிகை தனிகோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
மேலும் நாகநாதரின் இடபாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளில் இறைவியின் திருமுகத்தில் நிலவொளி படுவது சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு துணைவியருடன் ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 04ம் தேதி பஞ்சமூர்த்திகள் எழுந்தருள விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 10ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 9ம் நாள் நிகழ்ச்சியாக குன்றுமுலைக்குமரி ஸ்ரீ கிரிகுஜாம்பிகை, ஸ்ரீ பிறையணி அம்மன் சமேத நாகநாதசுவாமி திருக்தேருக்கு எழுந்தருள, கூடியிருந்த நூற்றுக்கணக்காண பொதுமக்கள் திரண்டு வந்து வடம் பிடித்து இழுந்தும், தேரில் பவனி வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
10ம் நாளான டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் 11ம் நாளான டிசம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி மற்றும் பூப்பல்லாக்கு வீதியுலாவுடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நிறைவு பெறுகிறது.