சபரிமலை: திருஆபரண பவனியில் பந்தள மன்னரின் பிரதிநிதியாக பங்கேற்க சசிகுமார் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சுவாமி ஐயப்பன் குழந்தை பருவத்தில் இருந்து பந்தளம் மன்னரின் பராமரிப்பில் வளர்ந்தவர். ஐயப்பன் சபரிமலையில் குடிகொண்ட பின் அவரை காண வரும் பந்தள மன்னர், திருஆபரணங்களை கொண்டு வருவது ஐதீகம். இந்த ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்குக்கு இரண்டு நாள் முன்னதாக இந்த ஆபரணங்கள் பந்தளத்தில் இருந்து பவனியாக சபரிமலைக்கு எடுத்து வரப்படும். இந்த பவனியில் பந்தள மன்னரின் பிரதிநிதியாக ஒருவர் வருவார்.இந்த சீசனுக்கான பிரதிநிதியாக சசிகுமார் வர்மா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஜன.,13ல் திருஆபரண பவனி புறப்படுகிறது. தற்போது பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.