பதிவு செய்த நாள்
22
டிச
2015
10:12
கோவை : வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில், நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் உற்சாகத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு. வைகுண்ட ஏகாதசியான நேற்று, பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ராம்நகர் கோதண்டராமர் கோவில்: காலை 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர் சமேதராக, வைகுண்டவாசலை கடந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். சுவாமி பிரவச மண்டபத்தில் எழுந்தருளியதோடு, பஜனை கோஷ்டியோடு, சேஷ வாகனத்தில், வீதி உலா புறப்பட்டார். மூலவர் முத்தங்கி சேவையும், உற்சவர், ரத்னங்கிசேவையிலும், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில்: அதிகாலை 4:30 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சேஷ வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாமசங்கீர்த்தன இசைநிகழ்ச்சியும், நாட்டிய நடனக்குழுவினரின் நடனமும் நடந்தது. உப்பாரவீதி கல்யாணவெங்கட்ரமணசுவாமி கோவில்: சுவாமிக்கு, திருப்பள்ளி எழுச்சி, திருவாராதனம் நிறைவுக்குப் பின், காலை 5:30 மணிக்கு, வைகுண்டவாசல் திறக்கப்பட்டது. தேவியர் சமேதராக, கல்யாண வெங்கட்ரமண சுவாமி, சொர்க்கவாசலை கடந்து சேவை சாதித்தார். காலை 9:00 மணிக்கு திருவீதி உலா சென்றார்.
காரமடை அரங்கநாதர் கோவில்: கோவை மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ திருத்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, 5:00 மணிக்கு உச்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து, ஆஞ்சநேயர் சன்னதி முன்பு வீற்றிருந்தார். காலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. அப்போது, திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள், சொர்க்க வாசல் முன் நின்று, அரங்கநாத பெருமாளை எதிர் கொண்டு வணங்கினர். முதலில் மூன்று ஆழ்வார்களுக்கும், பெருமாள் காட்சி அளித்தார். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள், 5:40 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, நுாற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்து கோவிந்தா கோவிந்தா என கோஷம் போட்டனர்.
அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவில்: அதிகாலை 3:40 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 4:45 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. காலை 5:50 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பரமபத வாசல் வழியே வந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். அன்னுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசல் வழியே சென்று பெருமாளை தரிசித்தனர்.
* கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், வெள்ளலுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஜெகன்நாத பெருமாள் கோவில், ராமநாதபுரம் ஒலம்பஸ், நரசிங்க பெருமாள் கோவில், உக்கடம் நரசிம்மபெருமாள் கோவில், சலிவன்வீதி வேணுகோபால சுவாமி கோவில், பி.என்.புதுார் ராமர்கோவில், சிங்காநல்லுார் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று விமரிசையாக நடந்தது.
* இதேபோல, பெரிய நாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள கரிவரதராஜபெருமாள் கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதசுவாமி கோவில், நாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் நரசிம்ம பெருமாள் கோவில், பழையபுதுார் ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், சாரங்கநகர் ஆதிராமலிங்க பெருமாள் கோவில், திருமலைநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, திருவீதியுலா, நாமசங்கீர்த்தனம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.