பதிவு செய்த நாள்
22
டிச
2015
10:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கேயிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா நேற்று காலை 7மணிக்கு நடந்தது. இதை யொட்டி நேற்று காலை 5 மணிக்கு ரகு பட்டர் தலைமையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை பட்டர்கள் செய்தனர். 7மணிக்கு சொர்க்கவாசல் திறக்க பெரியபெருமாள் சங்கு சக்கர கவசமணிந்து, ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளினர்.
அங்கு பெரியாழ்வார் உட்பட ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்தனர். பக்தர்களின் கோவிந்தா, கோபாலா சரணம் முழங்க, மாடவீதிகள் வழியாக வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். திருவாய்மொழி, அரையர் வியக்யானம் நடந்தது.இதை தொடர்ந்து டிச.,30 வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது. மணவாள மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், முத்துபட்டர், அனந்தராமகிருஷ்ணபட்டர், சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், நகராட்சி தலைவர் செந்தில்குமாரி, தாசில்தார் அன்னம்மாள், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தக்கார் ரவிசந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் முத்துராஜ், செயல் அலுவலர் ராமராஜ் பங்கேற்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர்: சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு பெருமாளுக்கு சயனசேவை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 7 மணிக்கு பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார். யானை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார். மாலையில் பெரிய கருடவாகனத்தில் சுவாமி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படியார்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் வெள்ளை பட்டு உடுத்தி ராஜஅலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளினர். காலை 6.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்வழியே சுவாமி வெளியேறினார். பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பியபடி பூக்களை தூவி வரவேற்றனர். மற்றொரு சப்பரத்தில் எழுந்தருளிய ஆழ்வார்கள் பெருமாளையும், தாயார்களையும் எதிர்சேவை செய்து மாடவீதிகளின் வழியே சுற்றி வந்தனர். பின்னர் பக்தர்களும் பரமபத வாசல் வழியே வெளியேறினர். சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை சென்றடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வழிபட்டனர். ஹரேராமா, ஹரேகிருஷ்ணா பக்தசபையினரின் அகன்டநாம வழிபாடு நடந்தது. மாலையில் ஊஞ்சல் எழுந்தருளலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. கோயில் டிரஸ்ட் செயலாளர் நாராயணன், செயல்அலுவலர் அறிவழகன், சந்தானப்பட்டர் ஏற்பாடு செய்தனர்.
விருதுநகர்: விருதுநகரில் ராமர் கோயில் வளாகத்தில் உள்ள பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி கோயில் மற்றும் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. எழுந்தருளி வந்த சுவாமியை"கோவிந்தா கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சிறப்பு பூஜை நடந்தது.