பதிவு செய்த நாள்
22
டிச
2015
10:12
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது. திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. பின், பெருமாள் ஆழ்வார் வீதி எழுந்தருளல் நடந்தது. நாகல்நகர், ராம்நகர் பெருமாள் கோயில்களில் காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. பின், திருமஞ்சன பூஜைகள் நடந்தன. தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. காலை 6 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. ரங்கநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, காலை 4.30க்கு பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது.
பழநி: மேற்குரதவீதியிலுள்ள லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்குப்பின், 4 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள் எழுந்தருளினார். பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள்கோயில், கண்ணாடிபெருமாள் கோயில், வேணுகோபால சுவாமிகோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. துளசிதீர்த்தம், அவுல், சர்க்கரை பக்தர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு சன்னதிக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். கருட வாகனத்தில் பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார். எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எ.பண்ணைப்பட்டி பெருமாள் கோயில், மண்டபம்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சர்வ அலங்காரத்தில் பெருமாள் கருடாழ்வர் மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் வெளியே வந்து கோயிலை வலம் வந்தார். உட்பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சன்னிதானங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. டி.எஸ்.பி., செல்வம், செயல் அலுவலர் ராமசாமி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி இராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. உற்சவர் சவுமிய நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின் குதிரை வாகனத்தில் வீதி உலா நகர்வலம் வந்தார். மஞ்சள் நீராட்டு நடந்தது.