பதிவு செய்த நாள்
22
டிச
2015
11:12
நாமக்கல்: மாவட்டம் முழுவதும் உள்ள வைணவ கோவில்களில் நடந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் நகரின் மையத்தில், அனந்தசயனம் எனப்படும் அறவணைக் கிடந்தானாகிய அரங்கநாதர் திருமேணி கொண்ட குடவரைக்கோவில் உள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயன நிலையில் அரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதையடுத்து, பரமபத வாசல் வழியாக பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், வையப்பமலை அடுத்த மரப்பரை அழகுராய பெருமாள் கோவில், மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், வளையப்பட்டி மற்றும் பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவில், புதுப்பாளையம் அடுத்த சாணார்புதூர் கரிய பெருமாள் கோவில், சிங்காளந்தபுரம் கற்பூரநாராயணன் பெருமாள் கோவில், பட்டணம் கலியபெருமாள் கோவில் என, மாவட்டம் முழுவதும் உள்ள வைணவ கோவில்களில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பில், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் செய்திருந்தனர்.