பதிவு செய்த நாள்
24
டிச
2015
04:12
பூஜைக்கு உகந்தவை அருகம்புல், வில்வம், துளசி, வேப்பிலை, எலுமிச்சை, நறுமணமலர்கள் மற்றும் பல.
அருகம்புல்: தேவர்களைக் காக்கும் பொருட்டு விநாயகப் பெருமான் கொடியவனாகிய அனலாசுரனை விழுங்கிவிட்டதால் அவர் வயிற்றில் சூடு அதிகமாகிவிட்டது. அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது. அனலைத் தணிக்க என்ன செய்தும் பலனில்லை அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொரு வரும் 21 அருகம்புற்களை விநாயகருக்குச் சாத்தினர். உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது. அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது. அன்று முதல் கால அனலப்பிரசமர் என்று பெயர் பெற்றார் விநாயகர். சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் விநாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. ஆரோக்கியம் பெற, உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் ஜூஸ் பருகலாம்.
வில்வம்: சிவபெருமான் அசுரவதம் செய்ய நெற்றிக் கண்ணைத் திறந்ததால் அந்த வெப்பம் அகில உலகையும் தாக்கியது. அவரின் வெப்பத்தைத் தணிக்க குளிர்ச்சியான வில்வம் கொண்டு தேவர்கள் அர்ச்சித்தனர். சிவபெருமான் குளிர்ந்தார். வில்வம் பித்த மயக்கம், வாய்குழறுதல் போன்றவற்றை போக்கவல்லது உடலுக்கு வலுவை தரக்கூடியது.
துளசி: திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாத்துவதும் திருமாலுக்கு உகந்தவை. துளசியை இரவு நேரம், செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஏகாதசி போன்ற நாட்களில் பறிக்கக்கூடாது. துளசியால் அர்ச்சனை செய்வது நான்கு லட்சம் நமஸ்காரம் செய்த பலனைத் தரும். ஒரு முறை அர்ச்சித்த துளசியை ஜலத்தால் அலம்பிவிட்டு, அர்ச்சிக்கலாம். நிர்மால்ய தோஷம் துளசிக்குக் கிடையாது.
வேப்பிலை: மாவிலை போன்றே வேப்பிலையும் சிறந்த மின்கடத்தி, வீட்டுக்கு முன் வேப்பமரம் இருந்தாலோ, வேப்பிலை சொருகி வைத்தாலோ தீயகிருமிகள் உள்ளே வராமல் தடுத்துவிடும். வேப்பிலை பலநூறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அம்மனுக்கு மிகவும் உகந்தது.
எலுமிச்சை: தீய சக்தி, திருஷ்டி முதலியவற்றை தடுக்கும் சக்தி உடையது. எலுமிச்சை மந்திர சக்திகளை கிரகிக்கும் தன்மையுடையது. துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதும் , எலுமிச்சை தீபத்தை ராகு காலத்தில் ஏற்றி வைத்து வழிபடுவதும் சிறந்த நற்பலன்களை அளிக்கும்.
நம் முன்னோர்கள் மிகச்சிறந்த ஞானிகள் அவர்களது அனுபவமே நம் அனுகூலம். அவர்கள் செய்த ஒவ்வொரு சடங்கும், சம்பிரதாயமும் விஞ்ஞானமே கண்டு வியக்கும் மெய்ஞான ரகசியங்கள் எனவே, பண்பாட்டை, பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாப்போம்.