பதிவு செய்த நாள்
25
டிச
2015
10:12
ஆரியங்காவு: கேரளா மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, மாம்பழத்துறை புஷ்கலாதேவி ஜோதி ரூப ஆவாஹனம் நேற்று நடந்தது. ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் சவுராஷ்டிரா குல வழக்கப்படி தர்மசாஸ்தா புஷ்கலாதேவி திருக்கல்யாண வைபவம் ஆண்டு தோறும் மார்கழியில் நடக்கும். இதை முன்னிட்டு மாம்பழத்துறை புஷ்கலாதேவியை ஜோதி ரூபமாக ஆவாஹனம் செய்து ஆரியங்காவிற்கு அழைத்து (பெண் அழைப்பு) செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இங்கு சவுராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி முறை வைத்து, கும்பமரியாதை வழங்குவது ஐதீகம். பெண் அழைப்பு விழாவிற்காக வந்திருந்த ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுக்காரியதரிசி எஸ்.ஜெ.ராஜன் மற்றும் நிர்வாகிகளுக்கு, புஷ்கலாதேவி கோயில் கமிட்டி தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பிரகாஷ், உறுப்பினர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின், கோயில் தந்திரி தலைமையில் ஜோதி ரூப ஆவாஹனம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஜோதி ரூபத்தை சவுராஷ்டிரா சமூகத்தினர், கோயிலில் வலம் வந்து அலங்கார தேரில் அமர்த்தி பூஜைகள் செய்தனர். மாம்பழத்துறையில் இருந்து நெடும்பாறை, கழுதைரொட்டி, தென்மலை உள்ளிட்ட 18 முக்கிய கோயில்களில் ஜோதிரூப தரிசனம் நடந்தது. நேற்று மாலை ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலுக்கு வந்த தேருக்கு சவுராஷ்டிரா சமூகத்தினர், கேரள பக்தர்கள் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர். மாலை 6.30 மணிக்கு ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலுக்கு ஜோதி ரூபம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதை பெற்று கொண்ட கோயில் தந்தரி, தர்மசாஸ்தா ஜோதியுடன், புஷ்கலாதேவியின் ஜோதி ரூபத்தை ஐக்கியமடையச் செய்தார். அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாம்பழத்துறையில் புஷ்கலாதேவி ஜோதிமய சவுராஷ்டிரா மகாஜன சபை நிர்வாகிகள் மோகன், அமர்நாத், குப்புசாமி, கணேஷ், பாஸ்கர், நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இன்று (டிச.,25) இரவு 8 மணிக்கு நடக்கிறது. நாளை (டிச.,26) இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதில கேரள, தமிழக அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.