பதிவு செய்த நாள்
25
டிச
2015
10:12
டிச.,25ல் உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்து பெருவிழா என்பது கடவுள் நம்மோடு வாழ்கிறார் என்பதுதான். இந்த விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. மானுட வரலாற்றில் வாழ்வியல் மதிப்பீடுகளுக்கு உயிரோட்டம் கொடுத்து வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகரான இயேசு கிறிஸ்துவின் கருத்துகளை பின்பற்ற உறுதி எடுக்க வேண்டிய நாளாகும். இன்றைய சூழல் போர்களும், வன்முறை கலாசாரமும் நிறைந்ததாக உள்ளது. தோழமை உணர்வோடும், சகோதர மனப்பான்மையோடும் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
கிறிஸ்துவம் என்பது வாழ்வியல் அறநெறிகளை நிலைநாட்டுவதற்காக எப்போதும் இயங்கும் ஓர் ஆற்றல்.இரக்கம், மன்னிப்பு, பகிர்வு, அன்பு என்ற வாழ்வியல் மதிப்பீடுகளை அர்த்தமுள்ளதாக்குவதற்காக கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருவதிலும், பெற்றுத்தருவதிலும் தான் கிறிஸ்துமஸ் அர்த்தமுள்ள தாகுகிறது.உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள் என்ற இறை வார்த்தையை கூறி இந்த ஆண்டை இரக்கத்தின் யூபிலி ஆண்டாக திருத்தந்தை பிரான்சிஸ் உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும், அனாதையாக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதும் காலத்தின் கட்டாயம் என்பதை கிறிஸ்தவம் உணர்ந்திருக்கிறது. இதை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுவதுதான் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் நோக்கம். எளிமையாக கொண்டாடும் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.- அந்தோணி பாப்புசாமிரோமன் கத்தோலிக்க ஆர்ச் பிஷப், மதுரை.
அவர்கள்(ஞானிகள்)அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைந்தார்கள் -மத்தேயு 2:10தென்னிந்திய திருச்சபை மதுரை-ராமநாதபுரம் பேராயம் சார்பில், அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த, வரலாற்றை கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என பிரித்த ஒரு நிகழ்வு. கடவுளின் தன்னலம் கருதாத தியாகப்படுத்தும் அன்பை இவ்வுலகுக்கு வெளிப்படுத்தி செயல்படும் மனித நேயத்தை உண்டாக்கும்படி கிறிஸ்து இவ்வுலகில் தோன்றியதால் அவரது பிறப்பை இன்றும் மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். குறிப்பாக இவ்வாண்டில் நமது ஆடம்பரமான கொண்டாட்டங்களை குறைத்து, மனித நேயத்தோடு கடவுளின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வருவோம். இப்படி தேவையிலிருப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவதையே ஏசு தனக்குக் கொடுக்கப்படும் பரிசாக ஏற்றுக் கொள்கிறார் (மத்தேயு 25:40) கிறிஸ்து பிறப்பின் காலங்களில் எங்கும் நட்சத்திரங்களினால் ஆன அலங்காரங்களை பார்க்கிறோம். அவருக்கு மரியாதை செலுத்த அவர் பிறந்த இடத்தை தேடி வந்த ஞானிகளுக்கு ஒரு
வித்தியாசமான நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நட்சத்திரங்களை காணும் போதெல்லாம் இந்த நிகழ்வு நம் நினைவுக்கு வருகிறது.
* இயேசு காட்டும் வழியில் செல்வது மிகுந்த மகிழ்ச்சியை தரும்.* நமது வாழ்க்கைப் பாதை தவறு என உணர்வோமானால், இயேசுவின் அருளால் சரியான பாதைக்கு மாறிச் செல்ல வேண்டும்.
* மனித எண்ணங்களை விட எப்போதும் கடவுளின் வழிகாட்டுதலே சிறப்பானது.கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!-டாக்டர் எம்.ஜோசப் பிஷப், தென்னிந்திய திருச்சபை மதுரை-ராமநாதபுரம் பேராயம்