பதிவு செய்த நாள்
28
டிச
2015
06:12
குன்னூர்: குன்னூர் ஜெகதளாவில், நடந்து வந்த எத்தையம்மன் திருவிழா நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்களின் எத்தையம்மன் திருவிழா, அருவங்காடு ஜெகதளா கிராமத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கடந்த மாதம் துவங்கியது.
ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, நடத்தும் விழாவில் எத்தைகாரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் முடித்து, தாய்வீடான, கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறி வந்தனர். எத்தையம்மனை கன்னிதாயாக வழிபடும் காரக்கொரையில் பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவிழா நாளான காலையில், ஜெகதளா ஓதனட்டி சுத்தக்கல், பகுதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதில், செங்கோல் மற்றும் குடைகளுடன் எத்தைக்காரர்கள் சுமார், 3 கி.மீ., துõரம் வனப்பகுதி வழியாக ஊர்வலமாக வந்து, ஜெகதளா எத்தையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு, நீலகிரியில் உள்ள பல்லாயிரக்கணக்கான படுக இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, ஆடல் பாடல்களுடன் கொண்டாடினர். அம்மன் கோவிலை வந்தடைந்ததும் அங்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.