பதிவு செய்த நாள்
28
டிச
2015
02:12
கன்னிவாடி: வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி சித்தர் கோயில் குருபூஜை விழாவில், ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டியில் பிரசித்திபெற்ற மாரிமுத்துசித்தர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி புனர்பூச நட்சத்திரத்தில், குரு பூஜை விழா நடபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான குருபூஜை, நேற்று முன்தினம் தீர்த்த அழைப்புடன் துவங்கியது. மாலையணிந்த பக்தர்கள், கன்னிவாடி சோமலிங்கர், சுருளி, ராமேஸ்வரம், கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலம் நடந்தது. முளைப்பாரி, தீர்த்த குட அழைப்புடன், விநாயகர் வழிபாடு, கனிவர்க்கம் சாற்றுதலுடன் பாலாபிஷேகம் நடந்தது. திருவாசகம் முற்றோதலுடன், தீர்த்தாபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் குருபூஜை நடந்தது. வெளியூர்களில் இருந்து ஏராளமான சாதுக்கள் வந்திருந்தனர். வஸ்திர தானம் வழங்கலுடன் மகேஸ்வர பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம், தேவார, திருப்பதிக பாராயணம், பஜனை நடந்தது.