ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தங்ககோபுர தரிசனம் : ஆவலில் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2015 11:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க கோபுரத்தை தரிசிக்க, பக்தர்கள் அளவில்லா எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஆண்டாள் கோயில் திருப்பாவை விமான கோபுரம் தங்ககோபுரமாக மாற்றியமைக்கபட்ட நிலையில் ஜனவரி 20ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணி , கோயிலை சுத்தபடுத்தி வெள்ளையடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேக பணிகள் குறித்து கலெக்டர் ராஜாராமன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இன்று மாலை 2ம்கட்ட ஆலோசனைகூட்டம் நடக்கிறது. இந்நிலையில் தங்ககோபுரத்தை தரிசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும் விரும்புகின்றனர். இதற்காக தெற்கு மாடவீதி வழியாக கோயில் மேல்தளத்திற்கு சென்று, தங்ககோபுரத்தை தரிசித்து விட்டு, வடக்கு மாடவீதி வழியாக இறங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறையும் முன்வரவேண்டும்.