திருமாலின் வைஜயந்தி மாலையின் அம்சமாக மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர் தொண்டரடி பொடியாழ்வார். ஸ்ரீரங்கம் அருகே உள்ள மண்டங்குடியில் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் விப்ர நாராயணன். சேனை முதலியாரிடம் மந்திர உபதேசம் பெற்ற இவர், வேத சாஸ்திரங்களையும் கற்றார். நந்தவனம் அமைத்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொண்டு செய்து வந்தார். தேவதேவி என்னும் நாட்டியப் பெண் இவர் வாழ்வில் குறுக்கிட்டாள். நந்தவனத்தில் பூக்களைப் பறிக்கவும், தொடுக்கவும் உதவி செய்து அவரது அன்பைப்பெற்றாள். ஒருநாள் அடைமழை பெய்யவே, தேவதேவி நந்தவனத்திலேயே தங்க நேர்ந்தது. அன்று முதல் விப்ரநாராயணனுக்கு தேவதேவி மீது ஈடுபாடு அதிகரித்தது. தேவதேவி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், விப்ர நாராயணரிடம் இருந்த செல்வம் காலியானதும், அவரை விட்டு பிரிந்து விட்டாள். விப்ர நாராயணனோ, அவளை எண்ணி ஏங்கினார். இதைக் கண்ட பெரிய பிராட்டி (லட்சுமி தாயார்), திருமாலிடம் இதுவரை உங்களுக்கு கைங்கர்யம் செய்த விப்ர நாராயணனை காப்பாற்றும்படி வேண்டினாள். அவரைத் திருத்தி ஆட்கொள்ள திருமாலும் திரு விளையாடலைத் தொடங்கினார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஒரு தங்க தட்டை எடுத்துக் கொண்டு மணவாள தாசர் என்னும் பெயரில் மாறுவேடத்தில் தேவதேவியிடம் சென்றார். விப்ர நாராயணன் கொடுத்தனுப்பியதாகக் கூறி தங்கத்தட்டை தேவதேவியிடம் கொடுத்து மறைந்தார். இதைப் பெற்றுக் கொண்ட அவள், விப்ர நாராயணனைத் தன் மாளிகைக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள். மறுநாள் காலையில் கோவில் அர்ச்சகர் தங்கத்தட்டு காணாமல் போனதை அறிந்து அதை தேடும் முயற்சியில் இறங்கினார். தேவதேவி வீட்டில் அது இருப்பதை அறிந்து, அரசரிடம் புகார் செய்தார். விஷயம் அறிந்த அரசரும் விப்ரநாராயணரøயும், தேவதேவியையும் கைது செய்து சிறையில் அடைத்தார். அன்றிரவு அரசரின் கனவில் தோன்றிய திருமால், நடந்தவற்றைக் கூறி இருவரையும் விடுவிக்கச் செய்தார். பெண் இன்பத்தை விட திருமாலுக்கு செய்யும் கைங்கர்யமே நிஜமான இன்பம் தருவது என்று உணர்ந்தார். மீண்டும் நந்தவனத்தில் மலர் பறித்து திருமாலுக்கு சேவை செய்யத் தொடங்கினார். அதன்பின் அவருக்கு தொண்டரடிப் பொடியாழ்வார் என்னும் பெயர் ஏற்பட்டது. ரங்கநாதர் மீது திருப்பள்ளியெழுச்சி என்னும் பத்து பாசுரங்களும், திருமாலை என்னும் 45 பாசுரங்களும் பாடினார். இவருடைய திருநட்சத்திரம் மார்கழி கேட்டையான ஜன.7ல் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரைத் தவிர வேறு திவ்யதேசத்திலும் பாடாத இவரை பத்தினி ஆழ்வார் என்று அழைப்பர்.