பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
கோவை: கோவை கோட்டைமேட்டில், ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.கோவை, கோட்டை உப்பு மண்டி வீதியில் கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கரிவரதராஜ பெருமாள், பூமாதேவி, நீளாதேவியரோடு, மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். மகாலட்சுமி தாயாருக்கும், பக்த ஆஞ்சநேயருக்கு, தனித்தனி சன்னதிகள், உள்ளது.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோவில் கட்டுமானம், போதிய மராமத்துப்பணிகள் மேற்கொள்ளாததால் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்களில் முன் வந்ததை தொடர்ந்து, தற்போது முழு வீச்சில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கருவறை கோபுரம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளவும், கோபுரத்தில் சுதை சிற்ப வேலைப்பாடுகள் செய்யவும், திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் மராமத்துப் பணிகள் நடைபெறுவதால், மூலவர், பாலாலயம் செய்யப்பட்டுள்ளார். உற்சவர் எழுந்தருளுவிக்கப்பட்டு, அன்றாடம் பூஜைகளும், நைவேத்தியமும் நடைபெற்று வருகிறது. கட்டுமானம், பூச்சுப்பணிகள் நிறைவடைந்தவுடன் மகா சம்ப்ரோக்ஷனத்துக்கு, நாள் குறிக்கப்படும் என்று, பக்தர்கள் தெரிவித்தனர்.