பதிவு செய்த நாள்
08
ஜன
2016
12:01
மதுரை: மதுரை தமிழ் இசை சங்கம் ராஜா முத்தையா மன்றத்தில் மகாபாரதத்தில் தர்மர் என்ற சொற்பொழிவு நடந்தது.இதில் சின்மயா மிஷன் நிர்வாகி சிவயோகானந்தா பேசியதாவது: கேள்வி, கொடை, புலனடக்கம், தவம், பொறுமை, நேர்மை போன்ற தர்மத்தின் பல அங்கங்களும் முழுமையாக பொருந்தியவர் தர்மர். தன் வாழ்நாள் முழுவதும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டார். அவர், சூது விளையாடியது பலவீனமா, தியாகமா என சிந்தித்து பார்த்தால் அது அவருடைய மிகப்பெரிய தியாகத்தையே காட்டுவதாக உள்ளது.வியாச பாரதத்தில் தன் பொருட்டு யுத்தம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக யாரிடமும் கடிந்து பேச மாட்டேன். பெரியோர் கூறும் எதையும் மறுமொழி கூறாது நிறைவேற்று வேன், என சபதம் செய்கிறார்.அதன் காரணமாகவே தன் தந்தையான திருதராஷ்டிரன் சூது விளையாட அழைக்கும்போது அவர் வருகிறார். தன் சகோதரர்களான கவுரவர்களுக்காக ராஜ்யத்தை தியாகம் செய்வதே, அவர் சூது விளையாடியதன் நோக்கம்.தனக்கு பல துன்பங் களை கொடுத்த துரியோதனனிடத்தில் கூட பகைமை பாராட்டாமல் அன்பு செய்கிறார். பக்தி, பணிவு, மன்னிக்கும் இயல்பு போன்ற பண்புகளை இயல்பிலேயே உடையவர் தர்மர், என்றார்.