பதிவு செய்த நாள்
08
ஜன
2016
12:01
சென்னை: வண்டலுார் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு, 48 நாட்கள் புத்துணர்வு முகாம், நேற்று துவங்கியது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், தாயினால் கைவிடப்பட்ட, மூன்று கைவளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன. உரிகம் என்ற யானைக்கு ஆறு வயதும், கிரி என்ற யானைக்கு ஐந்தரை வயதும், அசோகன் என்ற யானைக்கு, ஐந்து வயதும் ஆகிறது. நேற்று காலை, அந்த மூன்று யானைகளுக்கான புத்துணர்வு முகாம், பூங்காவில் துவங்கியது. இதில், யானைகளுக்கு வழக்கமான உணவுகளுடன் அடசுரணம், சவன்ப்பிரா, வைட்டமின் கலவை, தாது உப்பு, புரோட்டீன் கலவை, செரிமான அபிவிருத்தி மருந்து, தென்னை ஓலை, மூங்கில் தழை, வாழை தண்டு ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டது. அரிசி சோறு, வெல்லம், உப்பு, பச்சைப்பயிறு ஆகியவற்றின் அளவும் அதிகரிக்கப்பட்டது. முகாம் நாட்களில், யானைகள் இரண்டு வேளை குளிப்பாட்டி, வெயில் நேரங்களில் சேறு மற்றும் குளத்தில் குளிக்க வைக்கப்பட்டு, ஓய்வில் விடப்படுகிறது. பூங்காவில் உள்ள விலங்கு மருத்துவர்கள், யானைகளை தினந்தோறும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பார்க்க, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், யானைகள் புத்துணர்ச்சி பெறும் என, பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.