தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில் தை சிறப்பு மிக்கது. நல்ல கணவன் மணாளனாக வாய்க்க வேண்டும் என்று கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருப்பர். இதற்காக பெருமாள் கோவிலில் ஆண்டாளின் திருப் பாவையும், சிவன் கோவில்களில் மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் பாடி வழிபடுவர். இதன் பயனாக, தை மாதத்தில் நல்ல வரன் அமைந்து கன்னியருக்கு சுபமுகூர்த்தம் நடத்த ஏற்பாடாகி விடும். இதன் அடையாளமாகவே தை மாத பிறப்பன்று வீட்டு வாசலில் கூரைப்பூ கட்டும் வழக்கம் ஏற்பட்டது. புதுப்பெண்ணுக்கு கூரைப்புடவை அணிவிப்பது போல, கூரைப்பூவும் திருமணத்தில் முக்கிய இடம் பெறும். அது மட்டுமல்ல! கூரைப்பூ கட்டிய வீட்டிற்குள் பூச்சிகள் நுழைவதில்லை என்கிறது விஞ்ஞானம். தை முதல் ஆனி வரையுள்ள உத்ராயண புண்ணிய காலத்தில் ஒரு மாதம் கூட இடைவெளியின்றி திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.