பதிவு செய்த நாள்
19
ஜன
2016
03:01
தைப்பூசம் என்றாலே முருகன் கோயில்களிலெல்லாம் பக்தி ரசம் பெருகும். ஆறுமுகனின் அழகிலும் கருணையிலும் கரைந்துருகுவார்கள். வள்ளல் பெருமான் காட்டியருளிய ஜோதி தரிசனமும், பிரசித்தம். அதுபோல பெருமாள் கோயிலில் இருக்கிறதா? கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை உள்ளது. இத்திருத்தலத்திற்கு சார க்ஷேத்திரம் வளநகர் ஆகிய பெயர்களும் உண்டு. வடக்கே முடிகொண்டான் ஆற்றுக்கும், தெற்கே குடமுருட்டி ஆற்றுக்கும் இடையே பரந்த நிலப்பரப்பில் இந்த கோயில் அமைந்துள்ளது.
நான்கு வேதங்களையும் நமக்கு அருளியவர் ஸ்ரீமந் நாராயணன். வேதத்தின் மூலம்தான் நாம் முன்ஜென்ம வினைகளைக் கரைத்துக்கொண்டிருக்கிறோம். வேத கோஷங்களின் மூலம்தான் இறைவனைக் காணமுடியும். அப்படிப்பட்ட வேதத்துக்கும் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்தது. ஒரு கல்ப காலத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்டபோது, வேதங்களும் அழிந்து போய்விடும் நிலையிருந்தன. அது குறித்து மகாவிஷ்ணு யோசித்தபோது, திருச்சேறைத் திருத்தலத்திலுள்ள மண்ணைக் கொண்டு செய்த பானையில் வேதங்களை வைத்து மூடிவிட்டால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வேதம் அழியாது என்று பிரம்மதேவன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குச் சொல்ல, அவரே சாரநாதப் பெருமாளாக அவதாரம் செய்து, திருச்சேறை வந்து பானை தயாரித்து, அதில் வேதத்தை வைத்துக் காப்பாற்றினார் என்கிறது தல புராணம்.
இத்தகைய அதிசய சம்பவம் நடந்த இந்தத் தலம் பஞ்சசார க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடுகளுடன் தொண்ணூறு அடி உயரம் கொண்டது. ஏழு நிலைகளுடன் விளங்குவது. மூலவர் திருநாமம் சாரநாதப் பெருமாள்; தாயார் சார நாயகி, விமானம் சாரவிமானம். சார புஷ்கரணி காவிரிக்குப் பிரத்யட்சமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் வராகமாய் அவதரித்து உலகை எடுத்துக் காத்த பெருமாளே, திருச்சேறையில் சாரநாதப்பெருமாளாகவும் அவதரித்துள்ளார் என்கிறது பிரபந்தம். திருமங்கை ஆழ்வார் இக்கோயிலைப் பற்றி பதின் மூன்று பாசுரங்கள் பாடியிருக்கிறார். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம். ஒருமுறை காவிரியானவள் தனக்கு கங்கையைவிட அதிக பெருமை வேண்டுமென்று, சாரபுஷ்கரணியின் மேற்கரையில் அரச மரத்தடியில் அமர்ந்து, சாரநாதப் பெருமாளை வேண்டி கடுமையாகத் தவம் செய்தாள். அவள் தவத்துக்கு மகிழந்த சாரநாதப் பெருமாள், கருட வாகனத்தில் பூமாதேவி, நீளாதேவி, சாரநாயகி, மகாலட்சுமி, ஸ்ரீதேவி சகிதம் வந்து தரிசனம் தந்து, காவிரி கேட்ட வரத்தை அளித்தார். காவிரி அன்னைக்கு இறைவன் வரமருளிய நாள் தைப்பூசம். ஒவ்வொரு ஆண்டும் தை மாத பூச நட்சத்திரத்தில், சாரநாதப் பெருமாள் ஐந்து தேவிகளுடன் தரிசனம் அளிக்கிறார். இதைக் காண்பது மகாமகப் புண்ணியத்திற்கு ஒப்பாகும். இத்தரிசனம் கண்டு சார புஷ்கரணியில் தைப் பூசத்தன்று புனித நீராடுவது மிகவும் புண்ணியத்தை அளிப்பதாகும்.
தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் கோயில் இதுதான்.